சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வேலைநிறுத்தம்; ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு


சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வேலைநிறுத்தம்;  ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு
x

ஈரோட்டில் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு

ஈரோட்டில் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

சரக்கு போக்குவரத்து

ஈரோட்டில் இருந்து ஜவுளிகள், மஞ்சள், எண்ணெய், தானியங்கள், மருந்துகள் உள்ளிட்டவைகள் சரக்கு லாரிகள் மூலம் டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இதற்காக ஈரோடு பார்க் ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு லாரிகளில் வரும் சரக்குகளை ஏற்றி, இறக்குவதற்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களே ஈரோட்டை சேர்ந்த சுமை தூக்கும் பணியாளர்களை நியமித்துள்ளது.

சாலை மறியல்

இந்த நிலையில் பவானி ரோடு அசோகபுரம் பகுதியில் உள்ள தனியார் சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் ஆகியவை நிறுவனம் வழங்கவில்லை என்று கூறி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 15-ந்தேதி சரக்குகளை இறக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் சரக்குகளை இறக்க வேண்டாம் என்று கூறி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேரை பணி இடை நீக்கம் செய்து வெளியேற்றினர்.

பின்னர் வெளி மாநில தொழிலாளர்களை வைத்து சரக்குகளை இறக்கி உள்ளனர். வேறு தொழிலாளர்களை கொண்டு சரக்கு இறக்கலாம். ஆனால், வெளி மாநில தொழிலாளர்களை கொண்டு இறக்கக்கூடாது எனக்கூறி கடந்த 2 நாட்கள் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்த போராட்டம்

அப்போது அந்த நிறுவனத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே வந்த சரக்கு போக்குவரத்து சங்க செயலாளர் பிங்கலன் என்பவர் சுமை தூக்கும் தொழிலாளர் ஒருவர் மீது இடித்துவிட்டதாக கூறி மற்ற தொழிலாளர்கள் அவரை கடுமையாக தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

சுமை தூக்கும் தொழிலாளர்களின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்தன.

ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

அதன்படி ஈரோட்டில் பவானி ரோடு, பார்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஈரோட்டில் இருந்து தினமும் குறைந்தது 100 லாரிகளில் சரக்குகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்தும் 50 லாரிகள் மூலம் ஈரோட்டிற்கு சரக்குகள் கொண்டு வரப்படுகிறது.

வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக எந்த சரக்குகளும் ஏற்றப்படவில்லை. இதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சரக்குகளும் லாரிகளில் இருந்து இறக்கப்படாமல் உள்ளன. இதனால் நாளொன்றுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மஞ்சள், ஜவுளி, எண்ணெய், கெமிக்கல், தானியங்கள் ஆகியவை புக்கிங் செய்யப்படாமல் தேக்க மடைந்துள்ளதாகவும் சரக்கு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story