குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு;குண்டும், குழியுமாக மாறும் தார்சாலை
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை எதிரே அமைக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் தார்சாலை குண்டும், குழியுமாக மாறி வருகிறது. மேலும் வீணாகும் தண்ணீரை கண்டு மக்கள் ஆத்திரம் அடைந்து வருகின்றனர்.
குடிநீர் குழாயில் உடைப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஜெயங்கொண்டம் வழியாக ஆண்டிமடம் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதே குடிநீர் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதி மக்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் குழாயில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை எதிரே திருப்பத்தில் செல்லும் சாலை ஓரத்தில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சாலையில் தண்ணீர் ஓடி வீணாகிறது. இதனால் இதன் மூலம் குடிநீர் பெறக்கூடிய கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் முக்கிய அதிகாரிகள் இவ்வழியாக சென்று வந்தாலும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய யாரும் முன் வரவில்லை. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும், மீண்டும்...
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் தனியார் பள்ளி, அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளாகங்கள், காவலர் குடியிருப்புகள், மகளிர் போலீஸ் நிலையம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் என முக்கிய பிரதான சாலையாகவும், கும்பகோணம் செல்லகுறைந்த பாதை தூரம் செல்லக்கூடிய சாலையாகவும் இது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் குடிநீர் குழாயில் ஏற்படும் உடைப்புகள் அடிக்கடி சரிசெய்யப்பட்டும், மீண்டும், மீண்டும் அந்த இடத்தில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது என தெரிந்ததால் அந்த இடத்தில் இருந்து மாற்றுப்பாதையில் குடிநீர் குழாயை அமைக்க வேண்டும். அப்படி செய்யாமல் உடைப்பு ஏற்படும் இடத்திலேயே பராமரிப்பு செய்து வருகின்றனர்.
சேதமடையும் சாலை
இதனால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. மேலும் வீணாகும் குடிநீர் தார் சாலையில் தேங்குவதால் சாலையும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றனர்.