அடிக்கடி முன் அறிவிப்பின்றி ஏற்படும் மின்தடை
திருச்சிற்றம்பலம் பகுதியில் அடிக்கடி அறிவிப்பின்றி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலம் பகுதியில் அடிக்கடி அறிவிப்பின்றி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முன் அறிவிப்பின்றி மின்தடை
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் மின்வாரிய அலுவலக நிர்வாகத்திற்கு உட்பட்ட சுமார் 15-க்கு மேற்பட்ட நகர மற்றும் கிராம பகுதிகளுக்கு நரியங்காடு கிராமத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மின் தடை ஏற்படுகிறது. இரவு, பகல் எந்த நேரமும் மின்தடை ஏற்படுகிறது. தற்போது திருச்சிற்றம்பலம் பகுதியில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
பொதுமக்கள் அவதி
வெயில் சுட்டெரிப்பதால் பகலில் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது. இதனால் மின்விசிறி இன்றி பொதுமக்கள் தூங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் பகுதியில் அடிக்கடி முன் அறிவிப்பின்றி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அடிக்கடி ஏற்படும் மின்தடையால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படுகிறது. வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விவசாய பணிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. மேலும் முமு்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தங்கு தடையின்றி மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--