மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட பெண்களின் வங்கி கணக்குக்கு பணம் செலுத்தப்பட்டது.
இருப்பினும், விண்ணப்பித்த பெண்களில் பலருக்கு பணம் வரவில்லை. இதைத்தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட மற்றும் விடுபட்ட விண்ணப்பதாரர்கள் உரிமைத்தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் முகாம்களில் மேல்முறையீட்டு அதிகாரியிடம் விண்ணப்பம் செய்யலாம் எனவும் மகளிர் உரிமைத்தொகைக்கான பிரத்யேக இணையதளத்திலேயே புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இவ்வளவு பயனாளிகள் என்ற இலக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.