19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விஜய்யின் 'லியோ' படத்தை தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி
விஜய்யின் ‘லியோ' படத்தை 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம், 'லியோ'. இந்த படம் வருகிற 19-ந்தேதி வெளியாகிறது. இதையொட்டி, 19-ந்தேதி அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை காலை 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது..
இந்த கோரிக்கைகளை பரிசீலித்த நிலையில், 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள்) சிறப்புக் காட்சிகள் திரையிடலாம் என்றும், ரசிகர்களின் பாதுகாப்பை திரையரங்குகள் உறுதி செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.
சிறப்பு கண்காணிப்பு குழு
இந்தநிலையில் 'லியோ' படத்துக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கமிஷனர்களுக்கு தமிழக அரசு முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
'லியோ' படத்தை பொறுத்த வரையில் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் சிறப்பு காட்சிகளாக திரையிடலாம். முதல் காட்சி 9 மணிக்கும், இறுதிக்காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கும் திரையிட்டு கொள்ளலாம். சிறப்பு காட்சி திரையிடுதலில் எந்த விதிமீறலும் ஏற்படாத வகையில் கண்காணிக்க, தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்டு சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், போக்குவரத்தில் பிரச்சினைகள் இல்லாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எந்த விதிமீறலும் நடக்காத வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர்
இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
'லியோ' என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது.
எனவே வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையில் 'லியோ' திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு வகுத்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அரசு அனுமதி அளித்துள்ள காலை 9 மணி தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் திரைப்படத்தை முடித்துக்கொள்ள வேண்டும். அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடும் நடவடிக்கை
இதற்காக சென்னை போலீஸ் துறையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திரையரங்குகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்செயல்கள், வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.