மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் சாவு
கழுகுமலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் பரிதாபமாக இறந்து போனார்.
கழுகுமலை:
கழுகுமலையில் கணவருடன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த புதுப்பெண் பரிதாபமாக இறந்து போனார்.
புதுப்பெண்
கழுகுமலையில் எட்டயபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35). சாக்கு வியாபாரி. இவருடைய மனைவி அருணாசலகனி (27). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இருவரும் கழுகுமலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள ஒரு கோவில் விழாவுக்கு சென்றனர்.
தவறி விழுந்தார்
அங்கு கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து கொண்டு கழுகுமலையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். கழுகுமலை - கோவில்பட்டி சாலையில் உள்ள வளைவு பகுதியில் செல்லும் போது திடீரென மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் அமர்ந்திருந்த அருணாசலகனி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் துணையுடன் சந்திரசேகர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
சாவு
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பெண் அருணாசல கனியின் உடலைபார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.