வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் போர்வை விற்பனை பாதிப்பு
வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் போர்வை விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் ஈரோடு சந்தை வெறிச்சோடியது.
வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் போர்வை விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் ஈரோடு சந்தை வெறிச்சோடியது.
ஜவுளி மார்க்கெட்
ஈரோடு, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் ஈரோட்டில் நடக்கும் ஜவுளிச்சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஈரோட்டுக்கு வந்து மொத்தமாக ஜவுளியை வாங்கி செல்கின்றனர்.
ஈரோடு அசோகபுரம் மார்க்கெட், கனிமார்க்கெட், சென்டிரல் மார்க்கெட், டெக்ஸ்வேலி உள்ளிட்ட இடங்களில் ஜவுளி சந்தைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் சாலையோரமாக ஏராளமான ஜவுளிக்கடைகள் அமைக்கப்படும். இதனால் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை முழுவதும் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியே பரபரப்பாக காணப்படும்.
போர்வை விற்பனை
இந்தநிலையில் நேற்று திருவேங்கடசாமி வீதியும், ஈஸ்வரன் கோவில் வீதியும் வெறிச்சோடி காணப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் இருந்த வந்திருந்த வியாபாரிகள் சாலையோரமாக சில கடைகளை அமைத்து இருந்தனர். இந்த நிலையில் ஈரோடு ஜவுளி மார்க்கெட்டுக்கு வெளிமாநில வியாபாரிகள் அந்த அளவுக்கு வரவில்லை. இதனால் ஜவுளி விற்பனை மந்தமாக காணப்பட்டது. இதேபோல் போர்வைகளின் விற்பனையும் அடியோடு பாதிக்கப்பட்டதால் குடோன்களில் தேக்கம் அடைந்தது.
இதுகுறித்து போர்வை கடை வியாபாரி பூபதி கூறியதாவது:-
ஈரோடு, சென்னிமலை, சிவகிரி, வெள்ளக்கோவில், வெள்ளோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போர்வைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த போர்வைகளை தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வார்கள். கடந்த ஆண்டு வெளிமாநில வியாபாரிகள் ஏராளமானோர் வந்திருந்ததால், ஈரோட்டில் போர்வைகளின் விற்பனை அமோகமாக காணப்பட்டது.
விலையில் மாற்றமில்லை
ஆனால் வெளிமாநிலங்களில் மழை பெய்து வருவதால் அங்கு இருந்து வியாபாரிகள் அதிக அளவுக்கு வராததால் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு வெளிமாநில வியாபாரிகளின் வருகை குறைந்தது. விலைவாசி உயர்வு காரணமாகவும் ஜவுளி விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. போர்வைகளின் விலையில் கடந்த சில நாட்களாக மாற்றம் ஏற்படவில்லை. குளிர் காலம் தொடங்கும்போது போர்வைகளின் விற்பனை மும்முரம் அடையும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.