வெளிநாட்டில் இருந்து ஆதிச்சநல்லூர் பொருட்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை
வெளிநாட்டில் இருந்து ஆதிச்சநல்லூர் பொருட்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்
ஸ்ரீவைகுண்டம்:
வெளிநாட்டில் இருந்து ஆதிச்சநல்லூர் பொருட்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும், என கனிமொழி எம்.பி கூறினார்.
கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட நேற்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வருகை தந்தார். அவர் முதலில் சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வந்தார்.
தாமிரபரணி நதிக்கரையோரம் பாண்டியராஜா கோவில் அருகே நடைபெறும் அகழாய்வு பணிகள், அதில் கிடைத்த முதுமக்கள் தாழிகள், தங்கப்பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து சிவகளையில் அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் தலைமையிலான ஆய்வாளர்கள் அவருக்கு விளக்கமளித்தனர்.
பாராட்டு
அங்கிருந்து ஆதிச்சநல்லூர் வந்த கனிமொழி எம்.பி.க்கு ஆய்வாளர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து குழியில் கிடைத்த பொருட்களையும், ஆய்வுக்குழிகளையும் பார்வையிட்டார். அங்கு தங்கம் கிடைத்த குழிக்குள் ஏணி வழியாக கனிமொழி எம்.பி. இறங்கி அங்கே கிடைத்த வெண்கல பொருட்கள், வாள் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார்.
அப்போது மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், தொல்லியல் ஆய்வாளர்கள் அறவாழி, யத்தீஸ்குமார், முத்துகுமார் உள்ளிட்ட ஆய்வாளர்கள் விளக்கம் அளித்தனர். அகழாய்வு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பேட்டி
இதனைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டம் மற்றும் காதணி கண்டுபிடிக்கப்பட்டது, முக்கியமான கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 145 வருடங்களுக்கு முன்பு ஜெர்மன் பெர்லின் நகர் உள்பட வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆதிச்சநல்லூர் பொருட்களை கண்டுபிடித்து அதை கொண்டு வந்து ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். நான் அதற்கான கடிதம் அளிப்பேன். தொடர்ந்து அந்த பொருட்களை மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன், என்றார்.
மேயர்-அதிகாரிகள்
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.