பவானிசாகர் அணையில் இருந்து நீர்திறப்பு குறைப்பு


பவானிசாகர் அணையில் இருந்து   நீர்திறப்பு குறைப்பு
x

பவானிசாகர் அணை

ஈரோடு

பவானிசாகர் அணையில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

உபரிநீர் திறப்பு

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண்அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்த கனமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த 5-ந் தேதி காலை 9 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது.

நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் மேல் மதகு மற்றும் கீழ் மதகு வழியாக வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

குறைக்கப்பட்டது

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் முதல் நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வது குறைந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 15 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக உபரிநீர் திறப்பும் குறைக்கப்பட்டது.

பவானி ஆற்றில் கீழ் மற்றும் மேல் மதகு வழியாக வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாகவே நீடிக்கிறது.


Next Story