அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
போர்வையை கயிறு போல் கட்டி சுவர் ஏறி குதித்து வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓடினர்.
பாதுகாப்பு இல்லம்
வேலூர் காகிதப்பட்டறையில் அரசு பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 6 சிறுவர்கள் அங்கிருந்த பாதுகாவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இல்லத்தில் இருந்த மற்ற சிறுவர்களும் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி மேலும் 5 சிறுவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் உடனடியாக பிடித்தனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து இல்லத்தில் சுற்றுச்சுவர்களின் உயரத்தை அதிகரித்தல், இரும்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டது.
மீண்டும் 7 பேர் ஓட்டம்
இந்த நிலையில் பாதுகாப்பு இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு சிறுவர்கள் சாப்பிட்ட பின்னர் அறைகளில் அடைக்கப்பட்டனர். இரவு 11 மணி அளவில் 7 சிறுவர்கள் தப்பிச்செல்ல திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் கழிவறை ஜன்னலை உடைத்து வெளியே வந்தனர். பின்னர் போர்வைகளை கயிறு போன்று இணைத்து சுற்றுச்சுவர் கம்பி மீது கட்டி சுவர்ஏறி குதித்து தப்பிச்சென்றனர்.
சிறுவர்கள் தப்பிச்சென்றது அங்கிருந்த பாதுகாவலர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து போலீசார் தப்பி ஓடிய சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனும் விசாரணை மேற்கொண்டார்.
2 பேர் பிடிபட்டனர்
இந்த நிலையில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெருமுகை அருகே 2 பேர் நடந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று நள்ளிரவில் 2 பேரை பிடித்தனர். மற்ற 5 சிறுவர்கள் எங்கு சென்றனர் என்பது குறித்து போலீசாருக்கு தெரியவில்லை.
காட்பாடி ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பிடிபட்ட 2 பேரையும் மீண்டும் இல்லத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் இல்லத்தில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''தப்பிஓடிய சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். அவர்களின் சொந்த ஊர், மாவட்டத்திலும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்'' என்றனர்.
கலெக்டர் விசாரணை
மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று பிற்பகலில் பாதுகாப்பு இல்லத்துக்கு சென்று இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். வேலூரில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் அடுத்தடுத்து சில நாட்களிலேயே 3 முறை சிறுவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.