அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓட்டம்


அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
x

நெல்லையில் வார்டனை தாக்கிவிட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடினார்கள். இதுபற்றி அறிந்த மாஜிஸ்திரேட்டு நேரில் விசாரணை மேற்கொண்டார். போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள

திருநெல்வேலி

நெல்லையில் வார்டனை தாக்கிவிட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடினார்கள். இதுபற்றி அறிந்த மாஜிஸ்திரேட்டு நேரில் விசாரணை மேற்கொண்டார். போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

அரசு கூர்நோக்கு இல்லம்

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. அடிதடி, திருட்டு, கொலைமுயற்சி உள்ளிட்ட வழக்குகளில் 18 வயது கீழ் உள்ள சிறுவர்கள் கைது செய்யப்பட்டால் இந்த கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுவார்கள்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 சிறுவர்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இல்லத்தில் கண்காணிப்பாளராக ஜெய்சங்கரும், வார்டனாக ராஜேந்திரனும் உள்ளனர்.

12 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

இந்த நிலையில் நேற்று இரவில் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதை வாங்கிக் கொண்ட 12 சிறுவர்கள் திடீரென்று வார்டனை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் சதீஷ்குமார், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மாஜிஸ்திரேட்டு விசாரணை

தொடர்ந்து புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், மார்க்கெட், ரெயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தப்பி ஓடிய சிறுவர்கள் மறைந்து உள்ளனரா? என்று போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடியது குறித்து தகவல் அறிந்த நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஆறுமுகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தப்பி ஓடிய சிறுவர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் நெல்லை மாநகரம் முழுவதும் அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story