கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தலா?


கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு   படகில் கஞ்சா கடத்தலா?
x

கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என போலீசார் 10 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என போலீசார் 10 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுக்கு செல்ல தயாரான மீனவர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் தற்போது மீன்பிடிக்க செல்லவில்லை.

இதன் காரணமாக கோடியக்கரையில் 400-க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் கரையை கடந்த நிலையில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல்

இந்த நிலையில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலுக்கு கோடியக்கரையில் படகில் கஞ்சா மறைத்து வைத்து இலங்கைக்கு கடத்த இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை தொடர்ந்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் அதிரடி போலீசார், உளவுத்துறை போலீசார் கோடியக்கரைக்கு விரைந்து சென்றனர்.

படகுகளில் 10 மணி நேரம் சோதனை

பின்னர் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 400 படகுகளையும் 4 குழுக்களாக பிரிந்து சென்று தொடர்ந்து 10 மணி நேரம் சோதனை செய்தனர். அப்போது படகு எண், உரிமையாளர் பெயர் உள்ளிட்டவைகளை பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து அங்கு தங்கி உள்ள வெளியூர் மீனவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

இந்த சோதனையில் எந்த ஒரு படகிலும் கஞ்சா சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடியக்கரையில் படகுகளில் போலீசார் சோதனை செய்ததால் 5 நாட்களாக அமைதியாக காணப்பட்ட கடற்கரையில் நேற்று பரபரப்பு நிலவியது.


Next Story