பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை ஆற்றில் நடைபெறும் பலி தர்ப்பண நிகழ்ச்சிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
குழித்துறை:
வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை ஆற்றில் நடைபெறும் பலி தர்ப்பண நிகழ்ச்சிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பலி தர்ப்பண நிகழ்ச்சி
குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் கடந்த 13-ந் தேதி முதல் வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி வருகிற 1-ந் தேதி வரை 20 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பொருட்காட்சியை தினமும் ஏராளமான மக்கள் கண்டு களித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வருகிற 28-ந் தேதி வாவுபலி சந்தை தினம் நடைபெறுகிறது. அதே சமயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வாவுபலி பொருட்காட்சிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு வசதி
மேலும் ஆடி அமாவாசையையொட்டி அன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அதிகாலை 4 மணி முதல் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமானோர் குழித்துறை ஆற்றின் பகுதியில் திரள்வார்கள்.
பலி தர்ப்பணம் நிறைவேற்ற வரும் ஆண்களும், பெண்களும் புரோகிதர்களிடம் சென்று பலி தர்ப்பண நிகழ்ச்சிக்கான பொருட்களை பெற்றுச் சென்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிப்பார்கள்.
அங்கு பெண் பக்தர்களுக்கு வசதியாக ஆற்றின் கரையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு
பலி தர்ப்பணம் கொடுப்பதற்கு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கணிசமான அளவு தண்ணீர் பாய்ந்து செல்ல வேண்டும். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு ஆற்றில் சிறிதளவு தண்ணீரே பாய்ந்தது.
எனவே அதற்கு வசதியாக பேச்சிப்பாறை அணையில் இருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று பேச்சிப்பாறை அணையில் இருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இது பலி தர்ப்பணம் நிறைவேற்ற வரும் மக்களுக்கு வசதியாக அமைந்துள்ளது. எனவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.