தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்குரேஷன் அரிசி கடத்திய கும்பல்போலீஸ் அதிகாரிகளிடம் பேசிய ஆடியோ ;சமூக வலைதளங்களில் உலாவரும் தகவலால் பரபரப்பு
தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய கும்பல் போலீஸ் அதிகாரிகளிடம் பேசும் ஆடியோ சமூக வலை தளங்களில் உலா வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாளவாடி
தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய கும்பல் போலீஸ் அதிகாரிகளிடம் பேசும் ஆடியோ சமூக வலை தளங்களில் உலா வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாகன தணிக்கை
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தமிழக -கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசியை, அரிசி கடத்தல் கும்பல் குறைந்த விலைக்கு வாங்கி, அதை அருகில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று முன்தினம் அதிகாலை தாளவாடி போலீசார் மகாராஜன்புரம் வனசோதனை சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
ஆடியோ
அப்போது அந்த லாரியில் 3 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரியில் இருந்த அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அரிசியை கடத்தி வந்தது தாளவாடியை சேர்ந்த ஜெயக்குமார், மனோஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையில் தாளவாடி மலைப்பகுதியில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலை சேர்ந்த மாதேவா என்பவர், ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேலிடம், செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.
அந்த ஆடியோவில் பேசும் மாதேவா 'ரேஷன் அரிசி கடத்தலுக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு ரூ.14 ஆயிரம் நாங்கள் கொடுத்துள்ளோம். எனினும் எங்கள் கும்பலை சேர்ந்த 2 பேரை அவர் கைது செய்துள்ளார்' என்று கூறி உள்ளார்.
வைரல்
இதேபோல் பெண் ஒருவர், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் செல்போனில் பேசும் மற்றொரு ஆடியோவும் வெளியாகி உள்ளது. அதில் பேசும் இன்ஸ்பெக்டர், 'அரிசி கடத்தலில் சிக்கிய லாரியை விடுவிக்க, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் பேசி சாதகமாக முடித்து தருகிறேன். நான் யாரிடமும் பணம் பெறவில்லை. இ்ன்னொரு போலீஸ்காரர் தான் என்னுடைய பெயரை சொல்லி வாங்கி இருக்க வேண்டும். எனவே நான் அவரை பிடித்து விசாரணை செய்கிறேன். அவர் பணம் பெற்றிருந்தால் பிடிபட்ட வாகனத்தை வெளியே எடுக்கும் செலவை அவரை தர சொல்கிறேன்.
மேலும் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு முன் ஜாமீன் கிடைக்கவும், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் பேசுகிறேன்' என கூறி உள்ளார். இந்த 2 ஆடியோவும் தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டரும், ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் சாதாரணமாக உரையாடும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.