தூத்துக்குடியில் ஒரே கப்பலில் இருந்து அதிக காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து வ.உ.சி. துறைமுகம் சாதனை


தூத்துக்குடியில் ஒரே கப்பலில் இருந்து   அதிக காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து வ.உ.சி. துறைமுகம் சாதனை
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஒரே கப்பலில் இருந்து அதிக காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து வ.உ.சி. துறைமுகம் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

ஒரே கப்பலில் இருந்து அதிக காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை படைத்து உள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காற்றாலை இறகுகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல்வேறு சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. ஒரே கப்பலில் 60 காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்தது சாதனையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி சீனாவில் இருந்து நான்பெங்க் ஷிசிங் என்ற சரக்கு கப்பல் 76.8 மீட்டர் நீளம் கொண்ட 120 காற்றாலை இறகுகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த காற்றாலை இறகுகள் பாதுகாப்பான பெரிய நகரும் பளுதூக்கிகள் மூலம் கையாளப்பட்டன. இதனால் 44 மணி நேரத்தில் அனைத்து காற்றாலை இறகுகளும் இறக்குமதி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

சாதனை

மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் இறக்குமதியில் சாதனைகளை படைத்து உள்ளது. கடந்த நிதியாண்டில் 2 ஆயிரத்து 906 காற்றாலை இறகுகளும், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரை 1,598 காற்றாலை இறகுகளையும் கையாண்டு உள்ளது. துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் மற்றும் உதிரிபாகங்களை சேமித்து வைப்பதற்கு தேவையான இடவசதியும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதனால் எளிதான முறையில் நீண்ட காற்றாலை இறகுகளை எடுத்து செல்லும் பிரத்யேக லாரிகள் எளிதாக துறைமுகத்தின் உள்ளே வந்து செல்கிறது.

பாராட்டு

காற்றாலை இறகுகளை சிறப்பாக மற்றும் பாதுகாப்பான முறையில் கையாண்டு சாதனை புரிய உறுதுணையாக இருந்த கப்பல் முகவர்கள், ஏற்றுமதியாளர்கள், துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தினால் வழங்கப்படும் சிறப்பான சேவை நம் நாட்டின் சுற்றுபுறச்சூழலின் மேன்மைக்கும், புதுப்பிக்கப்பட்ட மின்சாரம் தயாரிக்கும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story