தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு 1,930 டன் யூரியா ரெயிலில் வந்தது
யூரியா ரெயிலில் வந்தது
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களின் பாசன பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாயத்துக்கு தேவையான உரத்தை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் இருந்து கொள்முதல் செய்து, ஈரோட்டுக்கு கொண்டு வருகிறார்கள். அங்கிருந்து தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலமாகவும் விவசாயிகளுக்கு உரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் மூலமாக 1,930 டன் யூரியா ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து அந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஈரோடு மாவட்டத்துக்கு 1,680 டன் யூரியாவும், திருப்பூர் மாவட்டத்துக்கு 250 டன் யூரியாவும் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.