தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்றரூ.10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்றரூ.10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள், பீடி இலை, கஞ்சா உள்ளிட்டவை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி, நுண்ணறிவு பிரிவு முருகேசன் மற்றும் போலீசார் தூத்துக்குடி ராஜபாளையம் கடற்கரையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு மினிலாரி வந்தது. அந்த லாரியில் இருந்த சிலர் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகில் சில மூட்டைகளை ஏற்றுவதற்கு முயன்றனர்.

பீடி இலைகள் பறிமுதல்

அப்போது அங்கு வந்த போலீசாரை பார்த்ததும் மர்மநபர்கள் மினிலாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். உடனடியாக போலீசார் அந்த லாரியில் சோதனை நடத்தினர். அதில் 32 மூட்டைகளில் சுமார் 1,000 கிலோ பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், படகு மூலம் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. அவற்றின் இலங்கை மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. அவற்றை கடலோர பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story