முழு அடைப்பு எதிரொலி:விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள் ஓடவில்லை
புதுச்சேரியில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள் ஓடவில்லை.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அ.தி.மு.க. சார்பில் நேற்று புதுச்சேரியில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதுபோல் அம்மாநிலத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் மட்டுமே இயங்கின. இந்நிலையில் புதுச்சேரியில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் தனியார் பஸ்கள் நேற்று காலை முதல் இயக்கப்படவில்லை. அந்த பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்திலும், பெட்ரோல் நிலையங்களிலும் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமான இடங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் இயக்கப்படாத நிலையில் அரசு பஸ்கள் மட்டும் வழக்கம்போல் புதுச்சேரிக்கு இயக்கப்பட்டன.
பயணிகள் அவதி
ஆனால் 10 நிமிடத்திற்கு ஒருமுறை விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படும் சூழலில் நேற்று மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் புதுச்சேரி மார்க்க பஸ்கள் நிற்கும் இடம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. மேலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். இதனால் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக புதுச்சேரிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பஸ்சில் ஏறிச்சென்றதை காண முடிந்தது.