இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட முழு ஒத்துழைப்பு


இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட முழு ஒத்துழைப்பு
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் வருகிற 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுரை வழங்கினார்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியில் வருகிற 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுரை வழங்கினார்.

ஆய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் ஊட்டியில் கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அம்ரித் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான சிவசண்முகராஜா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு கடந்த நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 8-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கு படிவங்கள் பெறப்பட்டன. இதில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வருகிற 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

முழு ஒத்துழைப்பு

நீலகிரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் 3 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பாக நடைபெற்று உள்ளது. பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிட அலுவலர்கள், மாவட்ட கலெக்டருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீலகிரியில் தேர்தல் தொடர்பான பணிகளுக்கு தலைமை செயலகத்திலும் நற்பெயர் உள்ளது. இந்த பணிகளை இதை போன்று தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, பூஷணகுமார், முகமது குதுரதுல்லா, நகராட்சி ஆணையாளர்கள் காந்திராஜன், கிருஷ்ணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, தேர்தல் தாசில்தார் புஷ்பாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story