கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கொதிகலன் இளஞ்சூடேற்றும் விழா
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை வருகிற 5-ந் தேதி தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை சர்க்கரை ஆலையில் கொதிகலன் இளஞ்சூடேற்றும் விழா நடந்தது. இதற்கு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் ரஹ்மத்துல்லாகான் முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிறப்பு யாகம் செய்து, கொதிகலன் சூடேற்றும் பணி தொடங்கியது.
இதுகுறித்து ஆலை நிர்வாகத்தினர் கூறுகையில், இந்த ஆண்டு தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள 3 லட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 டன் கரும்பு அரவை செய்யப்படும் என்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆலையின் தலைமை பொறியாளர் மணிமாலன், தலைமை ரசாயனர் சுப்பிரமணியம், தலைமை கரும்பு அலுவலர் தாமோதிரன், தலைமை கணக்காயர் முருகேசன், தொழிலாளர் நல அலுவலர் தன்ராஜ், துணைத்தலைவர் மகாலிங்கம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பணியாளர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.