புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
சீர்காழி தாசில்தார் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தினர்
திருவெண்காடு:
நாகை, மயிலாடுதுறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்பின் கூட்டம் திருவெண்காட்டில் நடந்தது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அலிக்குள் ஜமான், செயலாளர் துரை செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் காசி பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் சீர்காழி தாசில்தார் அலுவலகம் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. வாடகை கட்டிடமும் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பூம்புகார் அருகே பழையகரம் கிராமத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் தடுப்பணை பகுதியில் உள்ள கரைகளை பலப்படுத்த வேண்டும், மங்கை மடம் கடைத்தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலாவுதீன் நன்றி கூறினார்.