தனியார் நிறுவனத்திடம் 5 பவுன் மோசடி செய்த பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது
கீரனூர் அருகே தனியார் நிறுவனத்திடம் 5 பவுன் நகையை மோசடி செய்த பர்னிச்சர் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
நகையை மீட்பதற்காக...
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ஒடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். காங்கிரஸ் பிரமுகர். இவரது மகன் சோலை ராஜன் (வயது 38). இவர், திருச்சி சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர், புதுக்கோட்டையில் அடகு கடை நடத்தி வரும் தனியார் நிறுவனத்தின் நிர்வாகி தினேஷ் (43) என்பவரிடம் கீரனூரில் உள்ள அடகு கடை நிறுவனத்தில் 90 கிராம் நகை அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டு உங்களிடம் அடகு வைப்பதற்கு பணம் தேவை என கூறியுள்ளார்.
பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது
இதனை நம்பி தினேஷ் ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்தை கொடுத்து உள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட சோலை ராஜன், 48 கிராம் நகையை மட்டும் தினேசிடம் கொடுத்துள்ளார். மீதி 42 கிராம் நகையை கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தினேஷ் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தலைமறைவான சோலைராஜனை நேற்று போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.