கார் மீது லாரி மோதி விபத்தில் பர்னிச்சர் கடை உரிமையாளர் சாவு
கார் மீது லாரி மோதி விபத்தில் பர்னிச்சர் கடை உரிமையாளர் இறந்தார்.
அரியலூர் விளங்காரதெருவை சேர்ந்தவர் மகாராஜா (வயது 45). இவர் அரியலூரில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வாகனத்தை அரியலூரை சேர்ந்த டிரைவர் செல்வகணேஷ் (45) ஓட்டிச்சென்றார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த ஒடிசா மாநில பதிவு எண் கொண்ட லாரி, சரக்கு வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த மகாராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த டிரைவர் செல்வகணேஷ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.