ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு: சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது


ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு: சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 26 July 2023 5:16 AM IST (Updated: 26 July 2023 5:16 AM IST)
t-max-icont-min-icon

ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு சென்னையில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

சென்னை,

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பான ஜி20 கூட்டமைப்புக்கு 2023-ம் ஆண்டின் தலைமை பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கல்வி, நிதி, பொருளாதாரம், ஆரோக்கியம், வேளாண்மை, கலாசாரம், சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் திறன், எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு, பருவநிலை மாற்றம், பன்னாட்டு நல்லுறவு, எரிசக்தி பாதுகாப்பு, பேரிடர் உதவி, பெண்கள் வளர்ச்சி போன்ற பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த விவாதம் நடந்து வருகிறது. தமிழகத்தில் ஜி20 நாடுகளின் கல்வி, நிதி, மகளிர் மாநாடு ஆகியவை ஏற்கனவே நடந்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு

நேற்று முன்தினம் பேரிடர் பாதுகாப்பு மாநாடு சென்னையில் தொடங்கியது. இந்த மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.இந்தநிலையில் ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் பிவாஷ் ரஞ்சன், கூடுதல் செயலாளர்கள் நரேஷ்பால் கங்வார், ரிச்சா ஷர்மா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு ஏற்கனவே பெங்களூரு, மும்பை, குஜராத் காந்திநகர் ஆகிய நகரங்களில் நடந்துள்ளது.

4-வது மாநாடு

4-வது மாநாடு சென்னையில் 26-ந்தேதி (இன்று) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 135 பேர் பங்கேற்கின்றனர். ஜி20 கூட்டமைப்பில் இல்லாத நாடுகளைச் சேர்ந்த 32 பேர் விருந்தினர்களாக பங்கு பெறுகின்றனர். இதுதவிர சர்வதேச அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் 23 பேர் கலந்து கொள்கின்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை விரைவுபடுத்துதல், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் பரிமாண சவாலை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள், உலகளவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள், அவற்றை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

மந்திரிகள் மாநாடு

28-ந்தேதி ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் மந்திரிகள் பங்கு பெறும் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் ஜி20 நாடுகள் மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை மந்திரிகள் 35-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாத்துரை உடன் இருந்தார்.


Next Story