காடம்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் செயல்படும் காடம்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளிப்பாளையம்:
எண்ணும்எழுத்தும் திட்டத்தில் செயல்படும் நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளருமான அருண்ராய், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறியதாவது:- 1 ,2,3-ம் வகுப்பு மாணவ -மாணவிகளிடம் கற்றல் இடைவெளியைக் களைய இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி முன்பருவக் கல்வியின் அடைவுகளை பெறாமல் உள்ளனர். அத்தகைய அரும்புநிலை மாணவர்களுக்கு உடலியக்கச் செயல்பாடுகள் நுண் தசை பயிற்சி கவனக் குவிப்பு மற்றும் எழுத்துக்கள் சார்ந்த செயல்பாடுகள் அளிக்கப்படுகின்றன என்றார். இதை தொடா்ந்து கலெக்டர் அலுவலகத்தில் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய், கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வனத்துறை அலுவலர் யோகேஷ்குமார் மீனா,மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, உதவி கலெக்டர் முருகேசன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.