கோவில்களில் கந்த சஷ்டி விழா


கோவில்களில் கந்த சஷ்டி விழா
x
தினத்தந்தி 26 Oct 2022 12:30 AM IST (Updated: 26 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் கந்த சஷ்டி விழா நடந்தது.

திண்டுக்கல்


திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம் 2-ந் தேதி (புதன்கிழமை) வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், அபிராமி அம்மன்- பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 11.30 மணியளவில் திருக்காப்பிடுதல் நடைபெற்று சூரிய கிரகணத்தையொட்டி கோவில் நடை சாத்தப்பட்டது. பின்பு மாலை 6.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு சாந்தி புண்ணியாஜனம், கலச பூஜை நடைபெற்றது. அதன் பின்பு சாமிக்கு அபிஷேகம் நடந்தது. 7 மணியளவில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான பொருட்களால் ஆன சிறப்பு அபிஷேகம் நடைபெற்று விரத காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'அரோகரா அரோகரா' என கோஷம் முழங்க காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.


பின்பு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ராஜஅலங்காரம் நடைபெற்று சாமி கேடயத்தில் புறப்பாடாகி ரத வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தது. திருவிழா நாட்களில் தினமும் மாலையில் ஒவ்வொரு வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது. விழாவில் கந்த சஷ்டி விழாவையொட்டி 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் 31-ந்தேதி மாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. 2-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்று கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.


அதேபோல் திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. மேலும் திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Next Story