காந்தி மார்க்கெட் தக்காளி மண்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்


காந்தி மார்க்கெட் தக்காளி மண்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
x

காந்தி மார்க்கெட் தக்காளி மண்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

திருச்சி

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

திருச்சி காந்தி மார்க்கெட் தக்காளி கமிஷன் மண்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 3 நாட்களாக கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தக்காளி கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது, ஒரு பெட்டி தக்காளி லோடு இறக்குவதற்கு ரூ.11 கூலி உயர்த்தி வழங்குவது எனவும், இந்த ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூலி உயர்வை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள், ஒப்பந்த காலக்கெடுவை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்தால் ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்றைய தினம் ரூ.80 ஆக உயர்ந்தது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் திருச்சி கிழக்கு தாசில்தார் கலைவாணி முன்னிலையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தக்காளி கமிஷன் மண்டி நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உயர்வு ஒப்பந்த காலக்கெடு 3 ஆண்டுகளில் 1½ மாதம் குறைத்து இறுதி செய்யப்பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த சுமைதூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நேற்று முதல் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

தக்காளி தட்டுப்பாடு

இதற்கிடையே வேலை நிறுத்தம் காரணமாக நேற்று முன்தினம் பல வியாபாரிகள் தக்காளி கொள்முதல் செய்யவில்லை. தக்காளி லோடுகளும் வரவில்லை. இந்தநிலையில் நேற்று காலை 4 லோடு தக்காளி மட்டுமே மார்க்கெட்டுக்கு வந்தது. தட்டுப்பாடு காரணமாக மார்க்கெட்டில் தக்காளி குறைவாகவே விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

அதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) 200 டன்னுக்கு மேல் தக்காளி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதால், இன்று முதல் தக்காளி விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story