காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு (கியூட்) மூலமும், முதுகலை டிப்ளமோ, இளநிலை டிப்ளமோ, பி.வோக் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்நிலையில் 'கியூட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. வருகிற 11-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதேபோல் முதுநிலை பட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 16, 17-ந்தேதிகளில் நடைபெறுகிறது. கலந்தாய்வுகளில் பங்கேற்க தகுதியுடைய மாணவர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் மூலமும், மின்னஞ்சல் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கிடைக்க பெற்ற மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இதுதொடர்பான கூடுதல் தகவல்களை பல்கலைக்கழக இணையதளமான www.ruraluniv.ac.in தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.