ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா


ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா
x

ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித்தளம் அருகே ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்ேவறு மாநிலங்களிலிருந்து தினந்தோறும் எண்ணற்ற மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதேபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைதொடர்ந்து அன்று மாலை ரத ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் தினந்தோறும் இரவு தர்காவில் பாத்திஹா (குர்ஆன்) ஓதப்பட்டு நார்ஷா வழங்கப்பட்டது. இந்நிலையில் 10-வது நாளான நேற்று கந்தூரி விழா நடைபெற்றது. கந்தூரி விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் தர்கா அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கூட்டுக்கொட்டகையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம், தாரை தப்பட்டை வாணவேடிக்கைகளுடன் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று தர்காவை வந்தடைந்தது.

பின்னர் ராவுத்தர் அப்பா அடக்கஸ்தலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது. இந்த கந்தூரி விழாவிற்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் பல மதங்களை சேர்ந்த திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஜமாத்தார்களும், கந்தூரி கமிட்டியார்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த கந்தூரி விழா மதநல்லிணக்க விழாவாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கந்தூரி விழாவிற்கு முதல்நாள் மண்டகப்படியை பத்தர் குடும்பத்தினர் காலங்காலமாக செய்து வருகின்றனர். தர்காவை பராமரித்தல், சந்தனக்கூட்டிற்கு முன்பு தீ பந்தம் ஏந்தி செல்லுதல் சந்தனக்கூட்டை வடம்பிடித்து இழுத்தல் ஆகியவை அனைத்தையும் கோட்டைப்பட்டினத்தை சுற்றியுள்ள நட்புகிராமமான கொடிக்குளம், இரளிவயல் பகுதியை சேர்ந்த பிறமதத்தவர்கள் தான் காலங்காலமாக செய்து வருகின்றனர். ராவுத்தர் அப்பாவும், முனியய்யாவும் உற்ற தோழராக இருந்துள்ளனர். இதனால் ராவுத்தர் அப்பா அடக்கஸ்தலம் அருகேயே முனியய்யா கோவிலும் அமைந்துள்ளது. தர்கா எவ்வாறு வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோ அதே போல் முனியய்யா கோவிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் நடைபெறும். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா அமைந்துள்ளது.


Next Story