விநாயகர் சதுர்த்தியையொட்டி 780 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து நாளை வழிபாடு


விநாயகர் சதுர்த்தியையொட்டி 780 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து நாளை வழிபாடு
x

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை 780-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற உள்ளது.

தேனி

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை 780-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற உள்ளது.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தேனி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படவுள்ளது.

இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் தீவிரமாக நடந்து வந்தது. இதையடுத்து வர்ணம் பூசி தயார் நிலையில் இருந்த சிலைகளை நேற்று மாவட்டம் முழுவதும் இருந்து வந்த விழாக்குழுவினர் வாகனங்களில் எடுத்துச் சென்றனர். சிலைகளை எடுத்துச் செல்லும் முன்பு அவை செய்யப்பட்ட இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், சிலையின் முகத்தை துணியால் மறைத்து எடுத்துச் சென்றனர்.

780 இடங்களில் பிரதிஷ்டை

மாவட்டம் முழுவதும் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட 780 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அனுமதிக்கப்படாத இடங்களில் சிலைகள் வைக்க போலீசார் தடைவிதித்தனர். அவ்வாறு சிலைகள் வைக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் ஒவ்வொரு சிலைகளுக்கும் தலா 4 தன்னார்வலர்கள் மற்றும் ஒரு போலீசார் வீதம் இரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து வாகனங்களிலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்ட சிலைகள் நாளை காலை பிரதிஷ்டை செய்து, கண் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

3 நாட்கள் ஊர்வலம்

மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் 3 நாட்கள் நடக்கிறது. பெரியகுளத்தில் நாளை ஊர்வலம் நடக்கிறது. தேனி, போடி, கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு ஆகிய இடங்களில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஊர்வலம் நடக்கிறது. சின்னமனூரில் வருகிற 2ந்தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது.

விநாயகர் சதுர்த்தி மற்றும் சிலைகள் ஊர்வலத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீசார் இந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும், பழனி பட்டாலியன் படைப்பிரிவில் இருந்தும் போலீசார் தேனிக்கு பாதுகாப்பு பணிக்கு வரவுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.


Next Story