விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள் அமோக விற்பனை
திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1,100-க்கு விற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதேபோல் அனைத்து கோவில்களிலும் சதுர்த்தி விழா வழிபாடுகள் நடைபெறும். இதுதவிர சதுர்த்தி விழாவையொட்டி வீடுகளில் மக்கள் பூஜைகள் செய்வார்கள்.
மேலும் சிறிய அளவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்படும். பின்னர் ஒரு சில நாட்கள் கழித்து சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு கோவில்கள் மட்டுமின்றி வீடுகளிலும் பயபக்தியுடன் நடத்தப்படுவது வழக்கம்.
பூஜை பொருட்கள் விற்பனை
இந்த பூஜையில் முதலிடம் பிடிப்பவை பூக்கள் தான். இதனால் சதுர்த்தி விழா விற்பனைக்காக திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பூக்கள், திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதேபோல் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை வாங்குவதற்கு மார்க்கெட்டில் குவிந்தனர். வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கினர்.
இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,100-க்கு விற்றது. இதேபோல் முல்லைப்பூ ரூ.520-க்கும், சாதிப்பூ ரூ.400-க்கும், காக்கரட்டான் ரூ.800-க்கும், அரளி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.250-க்கும், ரோஜா ரூ.130-க்கும், வாடாமல்லி ரூ.70-க்கும், கோழிக்கொண்டை ரூ.40-க்கும் விற்பனை ஆனது. ஒரேநாளில் 20 டன் பூக்கள் விற்பனை ஆகின. விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொரி, பழங்கள்
இதுதவிர அவல், பொரி, பேரிக்காய் மற்றும் கொய்யா, மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், தேங்காய், வெற்றிலை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
அதேபோல் விநாயக பெருமானுக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. இதனால் பச்சரிசி மாவு, வெல்லம், எள், கொண்டைக்கடலை ஆகியவற்றையும் மக்கள் வாங்கினர். இதனால் பூ மார்க்கெட் மட்டுமின்றி மளிகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் விற்பனையும் களைகட்டியது.