500 விநாயகர் சிலைகள் கரைப்பு


500 விநாயகர் சிலைகள் கரைப்பு
x

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 500 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 500 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். சதுர்த்தி விழா முடிந்து 3-வது நாளான நேற்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் பின்புறம் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்தூர், தர்மபுரி, தொப்பூரில் இருந்தும் விநாயகர் சிலைகளை வாகனங்களில் கொண்டு வந்து கரைத்தனர். சிலையை கரைக்க 100 அடி தூரத்திற்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதற்குள் மட்டுமே கரைக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் 4 முதல் 8 பேர் வரை மட்டுமே சிலையைக் கரைக்க அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

பெரிய சிலைகளை கரைக்க பொக்லைன் எந்திரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிலையை தண்ணீரில் கரைத்த பிறகு விநாயகர் சிலையை வைக்கும் மர சட்டங்களை பொதுமக்களே சேகரித்து கரையில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இப்பணியை கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை 98 விநாயகர் சிலைகள் கிருஷ்ணகிரி அணையில் கரைக்கப்பட்டன.

மத்திகிரி

மத்திகிரி, பழைய மத்திகிரி, அந்திவாடி, கர்னூர், பொம்மண்டப்பள்ளி, அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாட்டனர். இந்தநிலையில் நேற்று இந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று அந்திவாடி ஏரி, கர்னூர் ஏரி, நாககொண்டப்பள்ளி உள்ளிட்ட ஏரிகளில் கரைக்கப்பட்டது.

தேன்கனிக்கோட்டை

தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 100-க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று 40-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக வாகனங்களில் எடுத்து சென்று தளி பெரிய ஏரியில் பக்தர்கள் கரைத்தனர். ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். இந்தநிலையில் 3-வது நாளான நேற்று சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று குப்பம் சாலையில் அமைந்துள்ள ஆந்திரா ஏரியில் கரைத்தனர்.இதனால் வேப்பனப்பள்ளி பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் 500-க்கும் மேற்பட்ட சிலைகளை கரைத்தனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story