விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைப்பு
மலைக்கோட்டை, செப்.3-
திருச்சி மாநகரில் மேள தாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகரில் 300 சிலைகளும், புறநகரில் 909 சிலைகளும் என 1,209 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் செய்யப்பட்டன. அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விநாயகரை வழிபட்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்டவிநாயகர் சிலைகள் நேற்று ஆற்றில் கரைக்கப்பட்டன.
திருச்சி மாநகரில் தில்லைநகர், உறையூர், பாலக்கரை, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், விமானநிலையம், காந்திமார்க்கெட், கருமண்டபம், சுப்பிரமணியபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளும், புறநகரில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த சிலைகளும் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
இளைஞர்கள் உற்சாக ஆட்டம்
ஊர்வலத்தின் முன்பு அந்தந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் மற்றும் சிலை அமைப்புக்குழுவினர் உற்சாகத்துடன் ஆட்டம் போட்டனர். விநாயகர் சிலைகள் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் காவிரி ஆற்றுப்பாலத்தை வந்து அடைந்தன. அங்கு சிலைகளை கரைக்க வசதியாக ஆங்காங்கே 6 இடங்களில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சவுக்கு மரத்தால் ஆன தடுப்புகளும் கட்டப்பட்டு இருந்தன.
காவிரி பாலத்தில் ஒவ்வொரு சிலையாக வரிசையாக அனுமதிக்கப்பட்டு மேடை மீது வைத்து ஆற்றில் வீசப்பட்டன. அதிக உயரம் கொண்ட சிலைகள் மட்டும் கிரேன் உதவியுடன் ஆற்றில் கரைக்கப்பட்டன. போலீசார் மைக் மூலம் அறிவித்தபடியே சிலைகளை கரைக்கும் பணியை முறைப்படுத்தினர். நேற்று மாலை 4 மணி முதல் சிலைகள் கரைக்கப்பட்டன. இரவு 8 மணிக்கு மேல் அதிக விநாயகர் சிலைகள் வரத்தொடங்கின.
கண்காணிப்பு கேமரா
சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்படும் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. இதற்காக அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. அங்கு அமைக்கப்பட்டு இருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி சிலைகள் கரைக்கப்பட்ட காட்சியை போலீசார் கண்காணித்தனர். மேலும், ட்ரோன் கேமராக்கள் உதவியுடனும் கண்காணிக்கப்பட்டது.முன்னதாக விநாயகர் சிலை கரைப்பையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று மாலை வரை அதிக சிலைகள் வராததால் காவிரி பாலத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சியையொட்டி திருச்சி காவிரி ஆற்று பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
விடிய, விடிய கரைப்பு
மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவில், துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், அன்பு, ஸ்ரீதேவி ஆகியோர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனம் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
திருச்சி மாநகர், புறநகர் மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. நேற்று இரவு 12 மணி வரை 210 சிலைகள் கரைக்கப்பட்டு இருந்தன. நேற்று மாலை முதல் தொடங்கிய சிலைகள் கரைப்பு விடிய, விடிய நடைபெற்றது.