புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்தன


புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்தன
x

புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்தன.

புதுக்கோட்டை

விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள், இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இதனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். அதேநேரத்தில் விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன. புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் கடைகளில் விற்பனைக்கு குவிந்தபடி உள்ளன. மேலும் விநாயகர் சிலைகள் செய்து விற்கும் இடத்திலும் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.

விலை உயர்வு

சதுர்த்தி விழாவுக்காக தற்போதே விநாயகர் சிலைகளை முன்பதிவு செய்து வாங்கி செல்ல தொடங்கி விட்டனர். சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சிலைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வாங்கி செல்பவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சிலைகளின் விலை குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ''இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் விற்பனை அதிகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவால் கடந்த ஆண்டை விட தற்போது சிலைகளின் விலைகள் சற்று அதிகம் தான். சிறிய சிலைகளுக்கு ரூ.10 முதலும், பெரிய சிலைகளுக்கு ரூ.1,000 வரையும் உயர்ந்துள்ளன'' என்றார்.


Next Story