விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 25 Sept 2023 1:15 AM IST (Updated: 25 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல்

விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கொடைக்கானல் நகர ஒன்றிய இந்து முன்னணி மற்றும் கிராம பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கொடைக்கானல் நகர ஒன்றிய இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சி கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி நகர ஒன்றிய அமைப்பாளர் எல். சிவக்குமார் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் மோகன், நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகர ஒன்றிய பொதுச்செயலாளர் மகேந்திரன், பொருளாளர் ஹரிஹரன், பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் மதன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் பாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து முன்னாள் நகராட்சி தலைவர் வி.எஸ்.கோவிந்தன் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மூஞ்சிக்கல் மாரியம்மன் கோவில் தலைவர் முரளி, தைப்பூச விழா கமிட்டி தலைவர் ராஜேஷ், கண்ணா சித்தி விநாயகர் கோவில் தலைவர் சாந்த சதீஷ், ஒன்றிய தலைவர் மகேஸ்வரன் மற்றும் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

இதைத்தொடர்ந்து ஏரிச்சாலை, நகராட்சி அலுவலகம், 7 ரோடு சந்திப்பு அண்ணா சாலை மூஞ்சிக்கல் ஆனந்தகிரி தெருக்கள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஆற்றில் கரைத்தனர். இதில் ஏராளமான பெண்கள் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக ஆட்டம், பாட்டத்துடன் சென்றனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மாலை 6 மணி வரை சுமார் 8 மணி நேரம் நடந்தது. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர், துணைத் தலைவர், நகராட்சி கவுன்சிலர் தேவி செல்வராஜ், அய்யப்ப சேவா சங்க நகரத் தலைவர் துரைராஜ், செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் அரசகுமார், ரவி, மகாமுனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நத்தம்

இதேபோல், நத்தம், மீனாட்சிபுரம், அண்ணாநகர், கொண்டையம்பட்டி, வேலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இதையடுத்து நேற்று மாலை இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நத்தத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், மாநில பேச்சாளர் பிரபாகரன், நகர பொதுச்செயலாளர் வெங்கடேசபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 33 விநாயகர் சிலைகள் வாகனங்களில் வைத்து மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நத்தம்கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோவில் முன்பு தொடங்கிய ஊர்வலம், சாரல் மழையுடன் தர்பார் நகர், பஸ்நிலையம், மூன்றுலாந்தர், அவுட்டர் சாலை வழியாக அம்மன் குளத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்து குளத்தில் கரைக்கப்பட்டது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story