அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலை வைக்க வேண்டும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படும். பின்னர் சிலைகள் நீர் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும்.
இந்த விழாவின்போது அசம்பாவித சம்பவத்தை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக விழா குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 9.8.2018 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவித்த நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளிக்கப்படும்.
விநாயகர் சிலை வைக்க உள்ளவர்கள் அரசாணையில் குறிப்பிட்டுள்ள படிவம் 1-ல் சம்பந்தப்பட்ட உதவி கலெக்டரிடம் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளம்
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் https://Tiruvannamalai.nic.in- என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உதவி கலெக்டரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.