ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 58 விநாயகர் சிலைகள் கரைப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 58 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 58 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலை
தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோன்று பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபட்டனர். மாவட்டத்தில் ஒகேனக்கல், இருமத்தூர் தென்பெண்ணையாறு, நாகாவதி அணை, தொப்பையாறு அணை ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்தநிலையில் நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். 3-வது நாளான நேற்று கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு எடுத்து வரப்பட்டது.
58 சிலைகள் கரைப்பு
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி முதலை பண்ணை காவிரி ஆற்று பகுதியில் மட்டுமே கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை வரை 58 சிலைகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. மேலும் விநாயகர் சிலைகள் கரைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து 1,229 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வந்து அணைகளில் கரைக்கப்பட்டன.