திண்டுக்கல்லில் அனுமதியின்றி விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணியினர் 25 பேர் கைது
திண்டுக்கல் குடைப்பாறைபட்டியில் அனுமதியின்றி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து முன்னணியினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் இந்து அமைப்பினர் சிலை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளிப்பது இல்லை. எனினும் இந்து முன்னணியினர் ஒவ்வொரு ஆண்டும் சிலை வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி நேற்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
சிலை ஊர்வலம்
இதற்கிடையே இந்து முன்னணி நிர்வாகிகள் தாரை, தப்பட்டை முழங்க விநாயகர் சிலையை குடைப்பாறைப்பட்டி கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றனர்.
இதையடுத்து சிலை ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அனுமதியின்றி ஊர்வலமாக எடுத்து வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்து முன்னணியினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த விநாயகர் சிலையை கோட்டைக்குளத்தில் போலீசாரே கரைத்தனர்.
திருப்பூரில் போராட்டம்
திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிகள் போலீஸ் மற்றும் நகராட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு அகற்றப்பட்டது.
இதனை கண்டித்து போராட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருப்பூரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோட்டோரம் கட்டப்பட்டு இருந்த இந்து முன்னணி கொடிகளை போலீசார் அகற்றினார்கள்.
இதை கண்டித்து நேற்று குமார் நகரில் அவினாசி ரோட்டில் இந்து முன்னணி நிர்வாகிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
70 அடி உயர விளம்பர பலகை
இதற்கிடையே போலீசை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேர் திருப்பூர் மேம்பாலம் அருகே உள்ள தனியார் விளம்பர பலகைகள் வைக்கும் 70 அடி உயர இரும்பு கோபுரத்தின் உச்சியில் ஏறி இந்து முன்னணி கொடியை ஏந்தி கோஷமிட்டனர்.இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சென்று அவர்களிடம் சமாதானம் பேசி கீழே இறங்க வைத்தனர்.