விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
x

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும் 1,500 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

தர்மபுரி

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும் 1,500 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தர்மபுரி எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை, உபகார பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மேல் தோப்பு தெருவில் உள்ள செல்வ கணபதி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக்கவசம் சாற்றப்பட்டது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

1,500 இடங்களில் சிலைகள்

இதேபோல் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசக்தி விநாயகர் கோவில், நெசவாளர் நகர் விநாயகர் கோவில், பாரதிபுரம் விநாயகர் கோவில், மதிகோன்பாளையம் விநாயகர் கோவில், அன்னசாகரம் விநாயகர் கோவில், அப்பாவு நகர் கற்பக விநாயகர் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 1,500 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் தெருவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டார். இதேபோல் நகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின்பேரில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஒரு சில இடங்களில் நேற்று காலை விநாயகர் சிலைக்கு பூஜை செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலையே ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைத்தனர். மாவட்டம் முழுவதும் 3 நாட்களுக்குள் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் தென்பெண்ணை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விநாயகர் சிலைகளை எங்கே கரைப்பது என்று பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். அந்தந்த பகுதியில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலேயே சிலைகளை கரைக்க வேண்டும். ஒகேனக்கல் உள்ளிட்ட ஆறுகளில் கரைக்க வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.


Next Story