குன்னூர் வைகை ஆற்றில் மணல் அள்ளும் கும்பல்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றில் நள்ளிரவில் மர்மகும்பல் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றில் நள்ளிரவில் மர்மகும்பல் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல் அள்ளும் கும்பல்
தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றில் 15-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உறைகிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து தேனி நகர் பகுதி, கலெக்டர் அலுவலகம், ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை இதுவரை பெய்யாத நிலையில் குன்னூர் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அடியோடு சரிந்துள்ளது. இதன்காரணமாக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளில் தண்ணீர் சுரப்பதும் குறைந்துவிட்டது. இதனால் தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதற்கிடையே குன்னூர் வைகை ஆற்றில் கடந்த சில வாரங்களாக நள்ளிரவு நேரங்களில் மர்மகும்பல் மணலை சட்டவிரோதமாக அள்ளி வருகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு மேல் மாட்டு வண்டிகளிலும், டிராக்டர்களில் அந்த கும்பல் ஆற்றில் இருந்து தாராளமாக மணலை அள்ளி வருகின்றன. மேலும் வைகை ஆற்றில் அள்ளிய மணலை அதே பகுதியில் உள்ள முனியாண்டி கோவில் முன்பு குவித்து வைத்து, அதனை லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் கடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் வேதனை
வைகை ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், ஆற்றின் வழித்தடம் மாறி மழைக்காலங்களில் தண்ணீர் வரத்தில் சிக்கல் ஏற்படும் நிைல உள்ளதாக குன்னூர் பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் நள்ளிரவில் ஆற்றில் மணல் அள்ளுவது குறித்து மர்மநபர்களிடம் விவசாயிகள் தட்டிக்கேட்டால், அவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறுகையில், குன்னூர் வைகை ஆற்றில் தினமும் நள்ளிரவில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் மணலை அள்ளி வருகின்றனர். இந்த மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மணல் திருட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.