தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, போக்சோ, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கொலை
முத்தையாபுரம் முள்ளக்காடு நேதாஜிநகரை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடைய மகன் கருப்பசாமி (வயது 37). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை கொலை செய்த வழக்கில் முத்தையாபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதே போன்று வல்லநாடு கிழக்கு தெருவை சேர்ந்த கோமு மகன் உத்தண்டராமன் (24) என்பவரை முறப்பநாடு போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பழைய காயல் புல்லாவெளியை சேர்ந்த முருகன் மகன் அதிபன் (25) என்பவரை ஆத்தூர் போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர். மேலும், கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த வெயிலுமுத்து மகன் வெங்கடேசுவரன் என்ற வெங்கடேஷ் என்பவரை கோவில்பட்டி மேற்கு போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குண்டர் சட்டம்
இந்த நிலையில் இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கருப்பசாமி, உத்தண்ட ராமன், அதிபன் வெங்கடேசுவரன் என்ற வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.