வழிப்பறி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வழிப்பறி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

சேலம்

ரவுடிகள்

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜீத்குமார் (வயது 27). பெரியபுதூர் அர்த்தனாரி கவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (24). பிரபல ரவுடிகளான இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற காட்டூரை சேர்ந்த சிவராஜ் என்பவரை மிரட்டி ரூ.6,500-ஐ பறித்து சென்றனர். இது தொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீத்குமார், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், ஏற்கனவே இவர்கள் இருவரும் கன்னங்குறிச்சி பகுதியில் நடந்த அடிதடி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக தலா ஒரு வழக்கும், அழகாபுரம் பகுதியில் திருட்டு, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த ஆண்டு ஒரு வழக்கும் பதிவாகி உள்ளது தெரியவந்தது.

குண்டர் தடுப்பு சட்டம்

இந்நிலையில், அஜீத்குமார், மணிகண்டன் ஆகிய 2 பேரும் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாலும், பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாலும் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு அழகாபுரம் போலீசார் பரிந்துரை செய்தனர். இதை ஏற்று கைதான இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட கமிஷனர் நஜ்முல்ஹோடா நேற்று உத்தரவிட்டார். ஏற்கனவே, 2015, 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story