2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
புதுச்சத்திரம் அருகே இரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
புதுச்சத்திரம் அருகே புத்திரவள்ளியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்த இரும்பு பொருட்களை சம்பவத்தன்று 9 பேர் கொண்ட மர்மகும்பல் திருடி, 3 லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அந்த தொழிற்சாலையின் காவலாளிகள், மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்பு பொருட்கள் திருடிய ஆண்டார்முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 30), பூண்டியாங்குப்பம் ராஜசேகரன் (38), அஜித்குமார், சண்முகம், செந்தமிழ்முருகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுகதேவ், மணியரசன், ரகு, ரமேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
குண்டர் சட்டம்
இந்த நிலையில் பிரதீப்குமார், ராஜசேகரன் ஆகியோரது தொடர் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதீப்குமார், ராஜசேகரன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.