கஞ்சா வியாபாரி மனம் திருந்தி வாழ முடிவு


கஞ்சா வியாபாரி மனம் திருந்தி வாழ முடிவு
x

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் கஞ்சா வியாபாரி மனம் திருந்தி வாழ முடிவு செய்தார். போதைக்கு அடிமையாகிவிடாதீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வேலூர்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் கஞ்சா வியாபாரி மனம் திருந்தி வாழ முடிவு செய்தார். போதைக்கு அடிமையாகிவிடாதீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கஞ்சா வியாபாரி

வேலூர் தொரப்பாடி ஜீவாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 39). இவர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். எனவே இவர் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளது. இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்ததால் போலீசார் கைது செய்தனர். குண்டர்சட்டமும் இவர் மீது பாய்ந்துள்ளது. இந்த நிலையில் இவர் மனம் திருந்தி வாழ முடிவு செய்தார். அதன்படி இனி கஞ்சாவை விற்பனை செய்ய மாட்டேன் என்று பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பிரமாண பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.

தான் மனம் திருந்துவதாகவும், தன்னுடைய வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலையில் நேற்று மனந்திருந்தி வாழ ஆசைப்படுவதாக தெரிவித்து உறுதி அளித்தார். அதை தொடர்ந்து ராஜேந்திரன் கூறியதாவது:-

நான் வேலூர் மார்க்கெட்டில் கொத்தமல்லி விற்பனை செய்து வந்தேன். எனக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். குடும்ப வறுமையின் காரணமாக சிலருடன் சேர்ந்து கஞ்சா விற்க தொடங்கினேன். ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தேன்.

ஒருகட்டத்தில் எனக்கு இந்த தொழில் பிடிக்கவில்லை. பல்வேறு விளைவுகளை சந்தித்தேன். எனது குழந்தைகள் நான் திருந்த வேண்டும் என்று ஆசைப்பட்டனர். திருந்தினால் தான் படிப்பேன் என்று கூறினர். இந்த தொழில் செய்ததால் எனக்கும் மனஉளைச்சல் ஏற்பட்டது. வறுமையின் காரணமாக கஞ்சா விற்கும் தொழிலில் தள்ளப்பட்டேன். தற்போது அதில் இருந்து மீண்டு வாழ ஆசைப்படுகிறேன். எனது குழந்தைகள் ஆசைப்பட்டதாலும், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இனி கஞ்சா விற்பனை செய்ய மாட்டேன். கஞ்சா பயன்படுத்தினால் குடும்பம் கெட்டுவிடும். உடல்நிலையும் பாதிக்கும். யாரும் கஞ்சா போதைக்கு அடிமையாகி விடாதீர்கள். அது உங்களது குடும்பத்தை சீரழித்து விடும். உங்களது சந்ததியையும் அது பாதிக்கும்.

இனி நான் தவறு செய்யமாட்டேன் என்று உறுதியாக கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

டீக்கடை

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 21 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 322 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மனம் திருந்த வேண்டும். ராஜேந்திரன் திருந்தி வாழ ஆசைப்படுகிறார். அவர் டீக்கடை வைக்க உதவிகோரி உள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேசி முடிவு செய்து அவர் தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். சாராயம், கஞ்சா விற்பனை செய்தல் போன்ற எந்த வகையான குற்றத்தில் ஈடுபட்டாலும் மனம் திருந்தினால் அவர்களுக்கு உதவி செய்யப்படும்.

வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story