பள்ளி, கல்லூரி அருகே சர்வ சாதாரணமாக கிடைக்கும் கஞ்சா பொட்டலங்கள் - அன்புமணி ராமதாஸ்
போதை பொருள் விற்பனையை தடுக்க மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஈரோடு,
ஈரோட்டில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
75-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் 75 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை. இந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தில் 55 ஆண்டு காலம் திராவிட ஆட்சி நடந்துள்ளது. முதல்-அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். சுதந்திர தினத்தையொட்டி நாளை பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.
அதில் தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்குரிய செயல் திட்டமும் வெளியிட வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்கிறேன் என்று அறிவிப்பு வரவேண்டும். போதை பழக்கத்திற்கு எதிராக ஒரு செயல் திட்டத்தை வெளியிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என நானும் நம்புகிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பூரண மது விலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் 15 மாதம் ஆகியும் இது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.
காவிரி ஆற்றில் கடந்த 28 நாட்களாக 151 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. கர்நாடக மாநிலம் நமது தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். ஆனால் 28 நாட்களில் 151 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. இதை தடுக்க காவிரியில் குறைந்தது 50 தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதன் மூலம் 70 டி.எம்.சி. தண்ணீரை நாம் சேர்த்து வைக்க முடியும். இந்தியாவில் இலவசம் வேண்டுமா வேண்டாமா என்ற சர்ச்சை உள்ளது.
இது குறித்து பா.ம.க. அந்நிலைப்பாடு தேவையான இலவசம் வேண்டும் என்பதே ஆகும். தேவையான இலவசம் என்றால் கல்வி, சுகாதாரம், வேளாண் இடுப்பொருள் சம்பந்தமான இலவசங்கள் வேண்டும். வாக்குக்கான இலவசம் வேண்டாம். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக நாங்கள் அழுத்தம் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அரசு இது தொடர்பான அரசாணை வெளியிட்டது.
ஆனால் அதன் பிறகு அப்படியே இருந்து விட்டது. இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பவானி ஜமுக்காளம் உலகப் புகழ்பெற்றது. நூல் விலை உயர்வு காரணமாக 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துவிட்டனர். தற்போது 5 சதவீதம் ஜி.எஸ்.டி. நூலுக்கு போடப்பட்டுள்ளது. அதை விற்கவும் ஜி.எஸ்.டி. தனியாக போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக போதை பழக்கம் கூடி வருகிறது. பள்ளி கல்லூரி அருகே சர்வ சாதாரணமாக கஞ்சா பொட்டலங்கள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இதை போலீஸ் நினைத்தால் அடியோடு தடுத்து விடலாம். தற்போது கஞ்சாவை விற்பவர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் கைது செய்யப்படுவதில்லை. மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்கென்று கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி அரசை செயல்படுத்த வைக்கிறோம். ஆக்கபூர்வமான அரசியலை நடத்தி வருகிறோம். வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று 16 ஆண்டுகளாக பா.ம.க. கூறிவந்தது. அதை ஏற்று அரசு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது.
ஒரே நாடு, ஒரே தேர்வு என்ற முறை ஏற்புடையதல்ல. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு கல்விக் கொள்கை உள்ளது. நீட் நுழைவு தேர்வால் அதிக தற்கொலைகள் நடக்கிறது. இதற்கு பெற்றோர்களும் ஒரு வகையில் காரணமாக உள்ளனர். தங்களது பிள்ளைகளை கட்டாயப்படுத்தி டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். இதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பா.ம.க. 2.0 என்ற செயல்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். அதற்கான வெற்றி வியூகத்தை 2024-ல் நாங்கள் அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.