கடலூரில் குப்பை கிடங்கான கெடிலம் ஆறு வீடுகளில் இருக்க முடியாமல் அல்லல்படும் மக்கள்
கடலூர் கெடிலம் ஆறு குப்பை கிடங்காக மாறி வருகிறது. அதில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.
கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கடலூர் கம்மியம்பேட்டை மற்றும் முதுநகர் பச்சையாங்குப்பம் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இந்த கிடங்குகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதுடன், அருகில் வசித்த மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்ததால் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த குப்பை கிடங்குகள் மூடப்பட்டன.
அதன் பிறகு மாநகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கு அமைக்க, இதுவரை இடம் தேர்வு செய்யவில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடை வீதிகளில் துப்புரவு பணியாளர்கள் தாங்கள் சேகரிக்கும் குப்பைகளை அந்தந்த பகுதியிலேயே மொத்தமாக கொட்டி தீ வைத்து கொளுத்தி வருகின்றனர்.
அல்லல்படும் மக்கள்
மேலும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் கெடிலம் ஆற்றங்கரையிலும், திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி சாலையோரமும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக நத்தவெளி சாலையோரம் சுமார் 5 அடி உயரத்திற்கும் மேல் குப்பை குவியல்கள் உள்ளன. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் துர்நாற்றத்தால் மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.
என் குப்பை, எனது பொறுப்பு
இதேபோல் 'என் குப்பை, எனது பொறுப்பு' திட்டத்தின் கீழ் கெடிலம் ஆற்றங்கரையோரம் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். இருப்பினும் அங்கு தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், தற்போது ஆற்றங்கரை முழுவதும் குப்பை கிடங்காக மாறி வருகிறது.
அவை ஆற்று தண்ணீருடன் கலந்து கிடப்பதால், குப்பைகள் அனைத்து அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் ஆற்று தண்ணீர் மாசடைந்து, நிலத்தடி நீரும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில் அடிக்கடி கண்துடைப்புக்காக தூய்மை பணிகள் நடைபெறுகிறதே, தவிர ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
மூச்சுத்திணறல்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் தெருவோரத்தில் கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் காலை நேரத்தில் தெருக்கள் அனைத்தும் புகை மண்டலமாக காணப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதேபோல் நத்தவெளி சாலையோரமும், கடலூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் குடியிருப்பு பகுதிக்கு வெளியே குப்பை கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.