திருவண்ணாமலையில் தீப்பிடித்து எரிந்த குப்பை கிடங்கு


திருவண்ணாமலையில் தீப்பிடித்து எரிந்த குப்பை கிடங்கு
x

திருவண்ணாமலையில் தீப்பிடித்து எரிந்த குப்பை கிடங்கில் இருந்து வெளியேறி புகையினால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நகராட்சிக்கான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை வாகனங்களில் கொண்டு வரப்பட்டு இங்கு கொட்டப்படுகிறது.இந்த இடத்தில் பல வருடமாக குப்பை கிடங்கு செயல்பட்டு வருவதால் இங்கு மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றது. இந்த குப்பை கிடங்கு குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் உள்ளதாலும், கிரிவலப்பாதையில் அமைந்து உள்ளதாலும் இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது குப்பை கிடங்கில் குப்பை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர். காற்றின் வேகத்தால் தீ குப்பை கிடங்கில் பெரும்பாலான இடத்தில் பரவி எரிந்தது. இதனால் அங்கிருந்து வெளியேறிய கரும் புகையினால் திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலை, போளூர் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அவ்வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் சிலருக்கு புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் குப்பை கிடங்கிற்கு வந்து தீ எரிந்த பகுதிகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீ எரியும் வேகத்தை கட்டுப்படுத்தினர். இருப்பினும் ஆங்காங்கே லேசாக தீ எரிந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து மாலை வரை குப்பை கிடங்கில் இருந்து புகை வெளியேறியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


Next Story