கணியூர் பகுதியில் அத்துமீறி குப்பைகளைக் கொட்டி வரும் ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மீது அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணியூர் பகுதியில் அத்துமீறி குப்பைகளைக் கொட்டி வரும் ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மீது அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போடிப்பட்டி
கணியூர் பகுதியில் அத்துமீறி குப்பைகளைக் கொட்டி வரும் ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மீது அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவியும் குப்பைகள்
பெருகி வரும் மக்கள் தொகையால் அதிகரித்து வரும் குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு சவாலான விஷயமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் பெரும்பாலான ஊராட்சிகளில் முடங்கியுள்ளது. போதிய பணியாளர்கள் இல்லாததால் தூய்மைப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக குப்பைகளை சேகரிக்கும் பணிகள் சிக்கலாகிறது. மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டமும் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பல கிராமப்பகுதிகளில் குப்பைகள் தேங்கியுள்ளது.
மடத்துக்குளம் ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சியில் சாலை ஓரங்களில் குப்பைகள் மலை போல குவிந்து கிடந்தது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் அவ்வப்போது குப்பைகளுக்கு தீ வைப்பதால் காற்று மாசு, சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் குப்பைகளுக்கு வைத்த தீயால் கரும்புக்காடு தீக்கிரையான சம்பவமும் நடைபெற்றது. மேலும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றது. இதனையடுத்து சாலையோரங்களில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றிய ஊராட்சி நிர்வாகம் கணியூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டியதாக கூறப்படுகிறது.மேலும் அவற்றை தீ வைத்து கொளுத்தியதாகவும் புகார் எழுந்தது.
புகார்
வழிபாட்டுத் தலத்துக்கு அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் மழைநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன், எரிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக்கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து பேரூராட்சிப் பகுதியில் அத்துமீறி குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டும் ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மீது பேரூராட்சியின் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உடுமலை ஆர்டிஓ, மடத்துக்குளம் தாசில்தார், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பேரூராட்சியின் சார்பில் புகார் மனு வழங்கினர்.இதனையடுத்து ஆர்டிஓ உத்தரவின்படி தாசில்தார் செல்வி, வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.ஜோத்தம்பட்டி ஊராட்சியில் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யவும், முறையாக மேலாண்மை செய்யவும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.