தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் குவியும் குப்பைகள்


தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் குவியும் குப்பைகள்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் குப்பைகள் குவிகின்றன. சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் வனத்துறை இதை கவனிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

ரூ.20 கட்டணம்

ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்லாமல் திரும்பி செல்வது கிடையாது. அந்த அளவுக்கு தனுஷ்கோடி பகுதி சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து உள்ளது. இந்த நிலையில் தனுஷ்கோடி வரும் அனைத்து சுற்றுலா பயணிகளின் நான்கு சக்கர வாகனங்களிடமும் ஜடாதீர்த்தம் அருகே வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் சோதனை சாவடி என்ற பெயரில் தலா ரூ.20 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

குறிப்பாக இந்த சோதனைச்சாவடி அமைத்தது தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக தான். தனுஷ்கோடி வரும் அனைத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து அதன் பின்னரே வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிப்பது தான்.

ஆர்வம் காட்டுவதில்லை

அதுபோல் சோதனைச்சாவடி அமைத்து ஒரு சில வாரங்கள் சுற்றுலா வாகனங்களை வனத்துறையினர் பரிசோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த பின்னர் தான் அனுமதித்தனர். ஆனால் தற்போது தனுஷ்கோடி வரும் சுற்றுலா வாகனங்களை சோதனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவது கிடையாது. குறிப்பாக வாகனங்களை தடுத்து நிறுத்தி கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே வனத்துறையினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்கின்றனர். தனுஷ்கோடி, அரிச்சல் முனை, கம்பிப்பாடு உள்ளிட்ட கடற்கரையில் பல இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள், பழக்கழிவுகள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில், பாலித்தீன் கவர்கள் உள்ளிட்டவைகள் அதிகம்.

வனத்துறை கவனிக்குமா?

மேலும் தனுஷ்கோடிக்கு பூஜை செய்ய வரும் ஏராளமான பக்தர்களும் துணிகளை ஆங்காங்கே வீசிவிட்டும் செல்கின்றனர். தற்போது தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை மற்றும் பக்தர்கள் அமர்ந்து பூஜை செய்யும் கடற்கரை இது தவிர எம்.ஆர். சத்திரம் அருகே உள்ள கடற்கரை என பல இடங்களில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் கிடக்கின்றன. எனவே தனுஷ்கோடிக்கு பூஜைக்கு வருபவர்கள் துணிமணிகளை கடற்கரை பகுதியில் வீசக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் குவியும் குப்பைகளை அகற்ற வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story