வாய்க்காலில் குப்பைகள் அகற்றும் பணி
பொன்மலைப்பட்டி சாலையில் வாய்க்காலில் குப்பைகள் அகற்றும் பணியை கலெக்டர், ஆணையர் ஆய்வு செய்தனர்.
திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட புதுக்கோட்டை சாலையில் ஆவின் பால் பண்ணை, அரசு வாகன பணிமனை, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் போன்றவை அமைந்துள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் ஜெயில் கார்னரில் இருந்து பொன்மலைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில் கலக்கிறது. இந்த வாய்க்காலில் தண்ணீர் சரிவர செல்லாததாலும், ஹைவேஸ் காலனி மற்றும் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் பலர் வாய்க்கால் கரையோரம் குப்பைகளை கொட்டுவதாலும் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து வந்த புகாரை தொடர்ந்து, வாய்க்காலில் கழிவுகளை அகற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நேற்று அந்த வாய்க்காலில் இருந்த குப்பைகளை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினார்கள். இதை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அந்த பகுதியை சுத்தமாக பராமரிக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.